அதிக மொழிகள் தெரிந்தால்...
அதிக வேலை வாய்ப்புகள்!
தாய் மொழி தவிர நீங்கள் கூடுதலாக அறிந்திருக்கும் ஒவ்வொரு மொழியும் உங்களுக்குக் கூடுதலான வாய்ப்புகளைக் கொடுக்கும் என்பதே தற்போதைய நிலையாகும்.
மொழிபெயர்ப்பாளர்கள் இரண்டு வகைகளில் செயல்படுகிறார்கள். பிற மொழிகளில் உள்ள புத்தகங்களை, விளம்பரங்களை, சுருக்கமாகச் சொன்னால் அச்சிடப்பட்ட பிறமொழிகளில் உள்ளவற்றைத் தேவைப் படும் மொழியில் மாற்றிக் கொடுப்பது. அதாவது மொழி பெயர்ப்பது முதல் வகை.
எடுத்துக்காட்டாக ஜெர்மன் மொழியில் இருக்கும் செய்திகளை, தகவல்களை ஆங்கிலம் அல்லது இந்திய மொழிகளில் மாற்றிக் கொடுப்பது முதல் வகை. இரண்டாவதாக ஒரு மொழியில் பேசப்படுவதை தேவையான பிற மொழிகளில் மாற்றிச் சொல்வது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் பேசப்படும் மேடைப் பேச்சை, உடனே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்வது. பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த வெவ்வேறு மொழி தெரிந்த இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களை மொழிபெயர்த்துச் சொல்வது. இந்த இரண்டு வகை மொழி பெயர்ப்புகளுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்திய
மொழிகள் அல்லாமல், ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ், போர்ச்சு கீசம், ஜப்பான், சீன மொழிகளைக் கற்றிருந்தால் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த நாடுகளிலிருந்து வர்த்தகம் செய்வதற்காக இந்தியா வரும் அந்த நாட்டினருக்கும் நம்மவர்களுக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராகப் பணி புரிய தகுந்த நபர்கள் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களின் இந்திய அலுவலகங்களில், பணியிடங்களில் இன்டர்பிரட்டர் எனப்படும் இந்த மொழிபெயர்ப்பாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது. இவர்களுக்கு மாதம் 1.5 இலட்சம் முதல் ஊதியம் வழங்கப்படுவதை வலைதளங்கள் வாயிலாக அறியலாம். ஜப்பானிய மொழி பெயர்ப்பாளர் களுக்கான வேலை வாய்ப்பை http:www.naukri.com.japanese-interpreter-jobs என்ற
வலை தளத்தில் பார்த்து அறியுங்கள்.
இப்படி நிரந்தர வாய்ப்புகளைத் தவிர, அவ்வப்போது இந்தியா வரும் வெளிநாட்டினருடன் உரையாடுவதற்கும் மொழி வல்லுநர்கள் தேவைப் படுகின்றனர். இந்திய மொழிகள் தெரிந்திருப்பது அந்தந்த மாநிலங்களில் மிக எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உதவுவதைப் போல வெளிநாட்டு மொழிகள் அறிந்திருப்பதும் அந்த நாடுகளுக்கு எளிதில் சென்று வரும் வாய்ப்பைத் தருகிறது. இந்தியாவிற்குள் இருந்தபடியே டாலர்களை ஈட்ட உதவும் துறை சுற்றுலாத்துறையாகும். இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கவுரை கொடுக்கவும், அவர்களுடன் உரையாடவும் பன்மொழி வித்தகர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.
இவை மட்டுமல்லாமல், புத்தகங்களை மொழிபெயர்ப்பது என்ற பெரிய வாய்ப்பு இவர்களுக்காகக்காத்திருக்கின்றது. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்ற வேண்டும்..,” என்று மகாகவி சொன்னதை செயல்படுத்த மீண்டும் வீரமாமுனிவர் வரமுடியாது. நாம் தான் செயல்பட வேண்டும். தற்போது தமிழ் மொழியில் உள்ளவற்றைப் பிற மொழிகளிலும், பிற மொழிகளில் உள்ளவற்றைத் தமிழ் மொழிக்கும் மாற்றித் தரும் மொழிபெயர்ப்பாளர்களின் தேவை அதிகரித்து வருவதை புத்தகத் திருவிழாக்களில் காணலாம். ஏராளமான அயல்மொழி நூல்கள் தமிழுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஆனால் பொதுவாக அவை மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டு அதிலிருந்தே தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகின்றன. காரணம் மூல மொழியறிந்தோர் மிகவும் அரிதாகவே உள்ளனர்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவை பற்றி மேலும் விவரங்களை இந்திய அரசின் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் நிறுவனத்தின் http:employmentnews.gov.inCareer_in_Translation.asp என்ற வலைதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கூடுதலாக மொழியறிவை எப்படிப் பெறுவது? பள்ளிப் படிப்பிற்குப் பிறகு கல்லூரி படிப்பைத் துவங்கும்போதே கூடுதல் மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கலாம். மூன்றாண்டுகள் முனைப்புடன் பயின்றால் ஒரு மொழியில் முழுமையாக, எழுத, பேச, படிக்க கற்றுத் தேறலாம். தற்போது வெளிநாட்டு மொழிகளைச் சொல்லிக் கொடுக்கும் தனியார் பயிற்சிப் பள்ளிகள் நிறைய வந்துவிட்டன. அல்லது சுய முனைப்பு இருந்தால், சந்தையில் கிடைக்கும் புத்தகங்கள், குறுவட்டுகள், இணையம் வழியே நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிலலாம்.
பல கல்லூரிகளிலும் இப்போது இந்திய மற்றும் அந்நிய மொழிகளைச் சொல்லிக் கொடுக்கவும் துவங்கியுள்ளனர். மேலும் ஆங்காங்கே உள்ள பிற மாநிலத்தவர்களின் சங்கங்கள் வாயிலாகவும் அவர்களது மொழியைச் சொல்லிக் கொடுக்கின்றனர். சென்னை போன்ற நகரங்களில், மேக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மன் பயிலலாம். தக்ஷிணபாரத் ஹிந்தி பிரச்சார் சபாவில் இந்தி மொழியைப் பயிலலாம். மலையாள சமாஜம், குஜராத்தி சமாஜம் போன்றவற்றில் அந்தந்த மொழிகளைப் பயிலலாம். (எப்படியாவது உங்கள் வீட்டில் தமிழை பேசத் தவற வேண்டாம்.) ஒரு மொழியை முனைப்புடன் பயின்றால், தினசரி 1 மணி நேரம் செலவிட்டால், 6 மாதங்களில் பயின்றுவிடலாம் என்பது உறுதி. அதிகபட்சமாக ஒரு வருடம் எடுத்துக் கொண்டால்கூட, மூன்றாண்டு பட்டப்படிப்பை முடிக்கும்போதே மூன்று மொழிகளைக் கூடுதலாக அறிந்திருக்கலாமே!
நன்றி - தினமணி : இளைஞர்மணி



Comments
Post a Comment